Followers

Monday, November 26, 2012

அடுத்த மாதம் 16 ந்தேதி பரமக்குடியில், கண்டன பொதுக்கூட்டம்: நடிகர் கார்த்திக் அறிவிப்பு

அடுத்த மாதம் 16 ந்தேதி பரமக்குடியில், கண்டன பொதுக்கூட்டம்: நடிகர் கார்த்திக் அறிவிப்பு
மதுரை, நவ. 26-

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் காசிராஜன் தலைமை தாங்கினார். கட்சியின் நிறுவனத்தலைவர் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குரு பூஜைக்கு சென்று விட்டு திரும்பும்போது 20 பேர் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி இருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவே மதுரை வந்தேன். அவர்களை பார்த்தபோது எனது மனம் மிகவும் வருந்தியது. இந்த தாக்குதலை கண்டித்து அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி பரமக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில் தேவர் குருபூஜையின்போது ஏற்பட்ட வன்முறை குறித்தும், நாட்டில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பொதுமக்களின் பிரச்சினை குறித்து பேசுவேன். நமது கட்சியில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் சென்னைக்கு அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பாலமுருகன், பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, November 8, 2012

இலண்டனில் நடக்கும் தமிழர்களின் மாநாட்டுத் தீர்மானம

இலண்டனில் நடக்கும் தமிழர்களின் மாநாட்டுத் தீர்மானம்
பிரித்தானியப் பாராளமன்றக் கட்டிடத் தொகுதியில் பிரித்தானியத் தமிழர் பேரவையும் தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சிப் பாராKளமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்து ஒழுங்கு செய்த உலக மாநாட்டில் இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மற்றும் பல நாடுகளில் இருந்தும் அரசியல்வாதிகளும் சமூக அமைபுக்களைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் இந்தியக் காங்கிரசுக் கட்சியினதும் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கூடாங்குளத்தில் இணைந்தது போல ஈழப் பிரச்சனையிலும் காங்கிரசும் அதிமுகாவும் இணைந்துவிடுவார்களா?

சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது கட்சிகளைப் பற்றி அதிகம் பேசுகின்றனர். தா. பாண்டியனின் உரையில் இருபது தடவைக்கு மேல் எனது கட்சி என்ற வாசகம் பாவிக்கப்பட்டிருந்தது. மு க ஸ்டாலின் தனது தந்தையின் டெசோ மாநாட்டைப் பெரிதுபடுத்தியும் மற்றும் தனது தந்தை ஈழத் தமிழர்களுக்கு செய்தவை பற்றியும் பேசினார். ஆனால் தனது தந்தை மூன்று மணித்தியால உண்ணாவிரதத்தால் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என்று சொல்லவில்லை. ஒரு கட்சியை மற்றக் கட்சியினர் இதுவரை தாக்கிப் பேசவில்லை என்பது சற்று ஆறுதலளிக்கிறது.

மாநாட்டில் முன்மொழியப்படவிருக்கும் தீர்மானம்:
எமது பாராட்டை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழுவினருக்கு அவர்களின் அறிக்கைக்காக, முக்கியமாக அவர்கள் தமிழர்கள் அரசியல் இனக்குழுமக் காரணங்களுக்கா ஒறுக்கப்பட்டமையையும் அழிக்கப்பட்டமையும் ஏற்றுக் கொண்ட்மைக்காகவும் தெரிவிக்கிறோம்.

எமது பாராட்டை டப்ளினில் கூடிய இலங்கைக்கான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினருக்கு அவர்களின் பரிந்துரைகளுக்கும் காணல்களுக்கும் தெரிவிக்கிறோம்.

2009 மேமாதம் போர் முடிந்த போதிலும இலங்கையின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதையும் தமிழர்கள் இப்போது தொடர்ந்து ஒறுக்கப்படுவதைத் தடுப்பதற்கான தேவையையும் கரிசனையுடன் கருத்தில் கொள்கிறோம்.

பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றிற்கான ரோம் சட்டங்களையும் காக்கும் பொறுப்புக் கோட்பாட்டின் அடிப்படையிலான பொறுப்பையும் பன்னாட்டுச் சமூகத்திற்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

தமிழினத்திற்கு எதிராக இலங்கை அரசின் முழுச் செயற்பாடுகளையும் முக்கியமாக போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம், இனக்கொலைக் குற்றம் போன்றவற்றையும் சுயாதின விசாரணை செய்ய உடன் நடவடிக்கை எடுக்கும் படி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை வேண்டிக் கொள்கிறோம்.

1. இலங்கைத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் நடப்பவை தொடர்பான உண்மையை அறியும் முகமாக அங்கிருந்து தகவல்கள் சுதந்திரமாக வருவதை உறுதிசெய்ய உடன் நடவடிக்கை எடுக்கும் படியும், 2. இலங்கை அரசின் தமிழினப் பேரழிப்பை நிறுத்தும் படியும், 3 தமிழர் பாரம்பரிய தாயகம் சிங்கள மயப்படுத்துவதைத் தடுக்கும் படியும், 4. தமிழ்மக்கள் தமது தாயகத்தில் ஒறுத்தல் பயமின்றி தமது மக்களாட்சி உரிமைகளச் செயற்படுத்த தமிழர்கள் நிலத்தில் படைத்துறை அகற்றலைச் செய்யும் படியும் பன்னாட்டு சமூகத்தினதும் பன்னாட்டு குடிசார் அமைப்புக்களின் தலைவர்களை வலியுறுத்துகிறோம்.

Monday, October 29, 2012

தேவர் ஜெயந்தி விழா: தொண்டர்கள் பசும்பொன் பயணம் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஏற்பாடு

தேவர் ஜெயந்தி விழா: தொண்டர்கள் பசும்பொன் பயணம் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஏற்பாடு
மதுரை, அக். 29-

அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்களது அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105வது ஜெயந்தி விழா சிறப்பாக 28, 29 மற்றும் 30ம் தேதியில் கொண்டாடப்படுகிறது. பசும்பொன்னில் நேற்று ஆன்மீக விழா தொடங்கியது. விழாவில் கோவை காமாட்சி ஆதீனம் பேராசிரியர் ஏ.கோபால் கலந்து கொண்டு ஆன்மீக விழா நடத்தினர்.

100 வாகனங்கள் இன்று திங்கட்கிழமை எங்களது கட்சியின் சார்பில் தேவரின் 48-வது குருபூஜை விழா பசும்பொன்னில் அகில இந்திய தலைவர் வேலப்பநாயர், மாநில பொதுச்செயலாளர் (நானும்) தமிழ் மாநில பொறுப்பாளர் ப.முத்து மற்றம் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் மாலை 5 மணிக்கு மதுரை ரெயில்வே நிலையத்திலிருந்து 100 வாகனங்களில் புறப்பட்டு பசும்பொன் செல்கிறோம்.

திருப்புவனம் பார்த்திபனூர் மற்றும் அபிராமத்தில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கமுதி சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன்னில் இரவு 8.30 மணி முதல் 9.00 மணியளவில் தேவர் குருபூஜை சிறப்பாக நடைபெறும். நாளை (30-ந்தேதி) காலை 8.30 மணிக்கு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு தோழர் வேலப்ப நாயருடன் நானும் மற்றும் நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்தும், திருநகர் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தும், ஒத்தக்கடை ராஜகம்பீரத்தில் அமரர் அய்யனன் அம்பலம் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தல், மதுரை மாநகர் நான்கு பிரிவுகளாக பிரிந்து மதுரை மாநகர் முழுவதும் கொடியேற்று விழா, அன்னதானம் விழாக்கள் நடைபெறும்.

மாலை 5 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலையிலிருந்து என்னுடைய தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு ஏ.வி.பாலம், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, கான்சாமேட்டுத் தெரு வழியாக ஜான்சிராணி பூங்காவை அடைகிறது. அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நமது கட்சி சார்பில் நடை பெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்



மதுரை, அக். 29-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். தேசிய பார்வர்டு பிளாக் தலைவர் பி.டி.அரசக்குமார் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மாநில அவைத் தலைவர் ராஜபாண்டியன், துணை பொதுச்செயலாளர் நல்லமணி, மாவட்ட நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமானோர் தொடர் ஜோதி ஏந்தி வந்தனர்.

இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநிலக்குழு சார்பில் நாளை காலை 9 மணிக்கு மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்தானம் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் 100 வாகனங்களில் பசும்பொன் செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து அரசரடியில் உள்ள மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் மகேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு சந்தானம் தலைமையில் தமுக்கத்திலிருந்து தேவர் ஜெயந்தி ஊர்வலம் நடக்கிறது. பின்னர் ஜான்சி ராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தெற்குமாசி வீதி-மேல வீதி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

முத்துராமலிங்க தேவரின் 2 ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்

முத்துராமலிங்க தேவரின் 2 ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்
கமுதி, அக். 29-

முத்துராமலிங்கத் தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலயத்தில் நேற்று குருபூஜை விழா தொடங்கியது. 2-ம் நாள் குருபூஜை விழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் தேவரின் அரசியல் வாழ்வு குறித்த கருத்தரங்குகளும் நடைபெற்றது. 2-ம் நாள் குருபூஜை விழாவையொட்டி ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். லட்சார்ச்சனை பூஜையும் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். முன்னதாக நேற்று இரவு தேரோட்டமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.